ராஜ்குமார் பாரதி
ஒரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, கோயமுத்தூரில் கொஞ்சமாக நடக்கும் கச்சேரிகளுக்கெல்லாம் தவறாமல் போய்விடுவேன். இப்படியாக ஒரு நாள் ஆர்.எஸ்.புரம் ராவ் வீட்டில் ஒரு கச்சேரி. காம்பவுண்ட் உள்ளே பந்தல் போட்டு, நாங்கள் 'கித்தான்' என்று விளிக்கும் மெல்லிசான சாக்குத் துணி விரித்திருப்பார்கள். உட்கார்ந்திருக்கும்போது திடீரென்று அங்கங்கே குத்தும். இங்கு பளிச்சென்ற முகத்துடன், கண்ணாடி போட்ட இளைஞர் மிடுக்காகப் பாடிக் கொண்டிருந்தார். சஞ்சய், உன்னிகிருஷ்ணன் என்ற இளைஞர் பட்டாளம் அப்போது தலையெடுக்கத் தொடங்கினாலும், கோவையில் அவ்வளவு பிரபலம் இல்லை. அதுவரை, பாரம்பரிய இசை வயதானவர்களுக்காய் என்று நினைத்திருந்த நான் போன முதல் இளைஞர் கச்சேரி இதுதான். கணீர் குரலில், தெளிவான உச்சரிப்புடன் முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் நேர்த்தியுடன் கொஞ்சம் கூடப் பிசிறில்லாமல் பாடிக்கொண்டிருந்த ராஜ்குமார் பாரதியின் பாட்டு உடனே பிடித்துப் போனது. இந்தக் கச்சேரியின் மத்தியில் இவர் சுப்பிரமணிய பாரதியின் கொள்ளுப் பேரர் என்று அறிவித்த போது, இன்னும் மரியாதையும் வியப்பும் கூடியது.
அன்றுமுதல் இவர் கச்சேரிகளைத் தேடிப் பிடித்துக் கேட்கலானேன். முன் சொன்னதுபோல, மிக நேர்த்தியாகப் பாடக்கூடியவர் இவர். இவரது குரல் மந்த்ரஸ்தாயி மத்யமத்தில் இருந்து உச்சஸ்தாயி பஞ்சமம் வரை பாயும், இவர் சொல் கேட்கும். நல்ல பயிற்சி தெரியும். இவரது ராக ஆலாபனை அறிவுக்கும் உணர்வுக்கும் ஒருங்கே நிறைவளிக்கக் கூடியது. ஸ்வரங்கள் பாடும்போது நிறைய கணக்கு வழக்குகள் செய்து தாளவாத்தியக்காரரை நிமிர்ந்து உட்காரச்செய்வார். தெலுங்காகட்டும், கன்னடமாகட்டும், சம்ஸ்க்ருதம் ஆகட்டும், இவர் உச்சரிப்பின் தெளிவினால் பாட்டை உடனே எழுதிக் கொண்டு விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இவரது குரல் - ஆகா! கணீரென்ற, அதே சமயம் தேனொழுகும் குரல்வளம். வடக்கத்திய (ஹிந்துஸ்தானி) இசையிலும் பயிற்சியுள்ள இவர் குரல்வளத்தையும் பயிற்சி செய்து மேம்படுத்தியுள்ளார் என்று தெரிந்து கொண்டேன். இவரது குரலில் பாரதியார் பாட்டு கேட்க வேண்டும் - அந்தப் பாடல்களுக்கு இன்னும் உணர்ச்சியும் உயிரும் வந்துவிடும்! நான் மிகவும் விரும்பிக் கேட்பவை இவை!
பெங்களூரில்தான் இவர் கச்சேரிகளை மிகுதியும் கேட்டிருக்கிறேன். இடம், பொருள் அறிந்து பாடும் இவருக்கு பெங்களூர் சபாக்கள் போட்டி போட்டுக் கொண்டு அழைப்பு விடுக்கும். இவர் பாடும் புரந்தர தேவர் நாமாக்களைக் கேட்டுப் பாராட்டிக் கன்னடத்தில் புகழ்ந்து தள்ளுவார்கள். இப்படியாக ஒரு ராம நவமி கச்சேரிக்குப் போயிருந்தேன். அறிவித்தபடி ராஜ்குமார் பாரதி பாடவில்லை - வருத்தப் பட்டு, உணர்ச்சிகரமாக, நிகழ்ச்சியமைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்கப்புறம் அவர் நிகழ்ச்சி எங்கும் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை.
ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு ஞாயிறு காலை ஜெயா டிவியில் ராகமாலிகா நிகழ்ச்சியில் நடுவராகப் பார்த்தபோது சந்தோஷமாயிருந்தது. அவர் நல்ல உடல்நலத்துடன் பலகாலம் சிறப்பாய் வாழ்ந்து எம்மையெல்லாம் பாடி மகிழ்விக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
